Tuesday, October 18, 2011

நட்பு?

 நட்பு என்றால் என்ன? நட்பு என்பது ஒரு உறவா அல்லது உணர்வா? 

நாம் யாரோடெல்லாம் நட்பு கொள்ள முடியும்? மனிதர்கள்? மிருகங்கள்? பூச்சிகள்? தாவரங்கள்? இன்னும் என்னென்ன? எந்த மிருகம் வேறொரு மிருகத்தோடு நட்பு கொண்டுள்ளது? உயிரற்றவைகள் நட்பு கொள்வதில்லையா?

மனிதர்களில், ஆண் பெண் இருவருக்கும் நட்பு உண்டானால், அது அவர்களைத்தவிர மற்றவர்களுக்கு ஏன் புரிவதில்லை? நட்பு மட்டுமா? ரத்த சம்பந்தமில்லாத எந்த ஒரு ஆணும் பெண்ணும் காதலைத்தவிர வேறு உறவை பேணும்போது தமிழ்ச்சூழலில்(?) பெரும்பாலும் ஏற்றுகொள்ளாதது ஏன்?

பார்க்காமலேயே நட்பு பேணுவோர் எத்தனைபேர்? பேனா சிநேகிதர்கள் எங்கே போனார்கள்? உலகின் ஏதேனும் ஒரு மூலையில் அவர்களும் இருக்கக்கூடுமோ?

ஆண்கள் நட்பு அரட்டைக்கு மட்டும்தான? சேர்ந்து குடித்து கும்மாளம் அடிப்பவர்கள்தான் அதிகமா? உருப்படியான செயல்கள் செய்யும் நண்பர்கள் எத்தனைபேர்? இரண்டையுமே சமமாக செய்வதும் உலக இயல்புதானா?

குடித்து கும்மாளம் அடிக்கும் பெண் நண்பர்கள் பற்றி ஏன் யாருமே பேசுவதில்லை? அவர்கள் எதையுமே பொது இடத்தில் செய்யாததுதான் காரணமா? பொது இடத்தில் செய்தாலுமே பல நேரங்களில் கண்டுகொள்ளப்படாதது ஏன்?

திருமணத்திற்கு பின் நட்பு எவ்வாறெல்லாம் பயன்படுகிறது? எவ்வாறு துன்புறுத்துகிறது?

திருமணமான ஆணும் பெண்ணும் நண்பர்களாக வாழ முடியுமா? இதைத்தான் சம உரிமை என்கிறார்களா? நட்பில் ஏற்றத்தாழ்வுகள் யாரும் பார்ப்பதில்லையா?

நட்பில் விரிசல்கள் விழுவது எதனால்? பல நாட்கள், பல வருடங்கள் சேர்ந்து இருந்த ஆண் நண்பர்களை, ஒரு பெண் நிமிடங்களில் பிரித்து விட முடியுமா? ஆண்-ஆண் நட்பைவிட ஆண்-பெண் நட்பு பலமானதா? ஆண்-பெண் நட்பு வாழ்நாள் முழுதும் நட்பாகவே தொடர்கிறதா?

காதல் பிறந்த காலம் தெரியவேயில்லை, நட்பு பிறந்ததும் நமக்கு தெரியாதா? நீண்ட கால நட்பினால் என்ன சாதகம்? என்ன பாதகம்?

ஒருவருக்கு எத்தனை நண்பர்கள் இருக்க முடியும்? வாழ்நாள் முழுதும் நண்பர்களை சேர்த்துக்கொண்டே இருக்க முடியுமா? எத்தனை நண்பர்கள் வைத்திருந்தால், அத்தனை பேருடனும் தொடர்பில் இருக்க முடியும்?

தொடர்பில் இருந்தால்தான் நட்பு வளருமா? நட்புக்கும் வளர்பிறை தேய்பிறை உண்டா?

நண்பர்களை திட்டலாமா? நண்பர்களை அடிக்கலாமா? 

உலகளாவிய நட்பு சாத்தியமா? பிறநாட்டு, பிற மொழி நண்பர்கள் எத்தனைபேருக்கு உண்டு? எத்தனை பேருக்கு வாய்க்கும்?

இப்படி கேட்டுக்கொண்டே போகலாமா?

Sunday, October 16, 2011

பதிவு?

பதிவுகள் என்றால் பத்திகளாகத்தான் இருக்க வேண்டுமா? எல்லாமே கேள்விகளாக இருக்கக் கூடாதா?

கேள்விகள் கேட்டால் எல்லோருக்குமே கோபம் மட்டுந்தான் வருமா? யாருக்குமே சிந்திக்க தோன்றாதா? கேள்விகள் மட்டுமே பதிந்தால் யாரும் படிக்க மாட்டார்களா? ஹிட்ஸ் பற்றி மட்டுமே பதிவின் நோக்கம் ஆகுமா?

வெறும் கேள்விகள் உள்ள பதிவை படிக்காவிட்டால் பதிந்தது வீணாகிவிடுமா? படிப்பவர்கள் எத்தனைப்பேர் என்று கணக்கு செய்துதான் பதிவு எழுத வேண்டுமா?

நிறைய பேர் படிப்பதால் ஒரு பதிவு மேன்மையானதாகிவிடுமா? இலவசமாய் பதிய முடிந்தால்தான் பதிவு எழுதுவோமா? பதிவுலகில் சண்டை போட்டுக்கொண்டால் எல்லோரும் எதிரிகளாகிவிடுவார்களா? எதிரிகள் மீண்டும் நண்பர்களாக ஆகவே முடியாதா?

தொடரும் என்று போட்டுதான் ஒரு பதிவை முடிக்க வேண்டுமா?